லஞ்ச குற்றச்சாட்டின் எதிரொலி - கடும் வீழ்ச்சியில் அதானி குழும பங்குகள்
- by செய்திக்குழு
- Nov 21, 2024
கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன .
கடந்த ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் விளைவாக, அதானி பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தது. இந்த நிலையில், இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க இந்தியாவின் 2ஆவது பெரிய பணக்காரரும், உலக பணக்காரர்கள் பட்டியலில் 22ஆவது இடத்தில் உள்ள பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம், பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேசியதாகவும், அதேபோல், அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதாகவும் கூறி அதன் ஆதாரங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து அதானி குழுமம் எந்தவித விளக்கத்தையும் இதுவரை தரவில்லை. இதன் எதிரொலியாக இந்தியாவில் வியாழக்கிழமை காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதும் அதானி குழும பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. ஆசிய அளவிலும் அந்த நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.