2026 தேர்தலில் திமுக கூட்டணி சரித்திர வெற்றி பெறும் - திமுக செயற்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பதுதான் நம்மோட இலக்கு என்றார். எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக சேர்ந்து வந்தாலும்சரி, 2026 தேர்தலில் திமுக கூட்டணி சரித்திர வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் 200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும்; 2026-ல் வெற்றி நமதுதான் என்றும் அவர் பேசினார்.

திமுக செயற்குழுக் கூட்டம், அதன் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவதாக அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசி அவரது தியாகத்தை இழிவுபடுத்தியதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஃபெஞ்சல் புயல் மறுசீரமைப்பிற்காக 6 ஆயிரத்து 675 கோடி ரூபாயை இதுவரை மத்திய அரசு ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதாகக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான நிலையில், தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியை விரைவில் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக் கோரியும், டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல விவகாரத்தில் அதிமுகவும், பாஜகவும் கபட நாடகமாடுவதாக கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டுக்கு உரிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாக கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதையும், திமுக ஆட்சி வருங்காலங்களில் தொடர்ந்திடுவதையும் தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி, முதலமைச்சர் தலைமையில் இதுவரை சந்தித்த எந்த தேர்தலிலும் தோற்கவில்லை என்று கூறினார். திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருப்பதாகக் கூறிய அவர், திமுக தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டு வருவதாகவும், 2026 தேர்தலில் திமுக பெறும் வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கான வெற்றியாக அமையும் என்றும் கூறினார். மேலும் முதலமைச்சர் சக்திவாய்ந்தவராகவும், மக்களை கவர்ந்த தலைவராகவும் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், 1957 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் களத்தில் திமுக எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை என்று தெரிவித்தார்.

எதிர் வரிசையில் நின்றவர்கள் எல்லாம் மாறிக்கொண்டே இருந்தாலும் திமுக இயக்கம் மட்டும் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். திமுக தலைமையிலான கொள்கை கூட்டணிக்கு எதிராக பலரும் அரசியல் கணக்கு போடுவதாகக் கூறிய முதலமைச்சர், அவர்களது கணக்கெல்லாம் தப்புக்கணக்காத் தான் ஆகும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு என்று கூறிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக சேர்ந்து வந்தாலும்சரி, 2026 தேர்தலில் திமுக கூட்டணி சரித்திர வெற்றி பெறும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வாக்கு சதவீதம் ஒரு விழுக்காடு உயர்ந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இல்லாததை இருப்பதுபோல ஊதிப்பெருக்கிக் காட்டுவது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என்று விமர்சித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19 புள்ளி 4 விழுக்காடு வாக்குகளை பெற்ற நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20 புள்ளி 4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக ஒன்றரை லட்சம் வாக்குகளை அதிமுக இழந்திருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுக தொண்டர்களே நம்ப மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் காட்டமாக விமர்சித்தார்.