குப்பைகளிலுள்ள உணவுப் பொருட்களை உண்ண வரும் கரடிகளால் அச்சம்

நீலகிரி மாவட்டம் உதகை கக்குச்சி கிராமப் பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதுடன் அதிலுள்ள உணவுப் பொருட்களை உண்பதற்காக கரடிகள் ஊருக்குள் உலா வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

உதகை ஊராட்சிக்கு உட்பட்ட கக்குச்சி கிராம ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய குப்பைத் தொட்டி அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே அப்பகுதி மக்கள் சாலையோரங்களில் உள்ள தாழ்வான பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால் அந்த குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளில் உள்ள உணவுப் பொருட்களை உண்பதற்காக பகல் மற்றும் இரவு நேரத்தில் கரடிகள் முகாமிட்டு உலா வந்த வண்ணம் உள்ளன.

எனவே இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றவும், குப்பைத் தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.